இந்திய மாநிலமான தமிழகத்தில் சாமியார் ஒருவர் பெண்ணை பேய் ஓட்டுவதாக கூறி சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மஞ்சநாயக்கனுரில் உள்ள கருப்பசாமி கோயிலில் பூசாரியாக இருந்தவர் அனில் குமார். இவர் பேய் ஓட்டுவதாகக்கூறி கோரமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தன்னிடம் பேய் ஓட்டிக்கொள்ள அழைத்து வரப்படும் பெண்களை சாட்டையாலும், பிரம்பாலும் அடித்து கால்களால் எட்டி உதைத்து மற்றும் கன்னத்தில் அடித்தும் கொடுமை செய்து வந்துள்ளார்.
அண்மையில் இதுபோல ஒரு பெண்ணை அடித்து தாக்கும் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் சிலர் செல்போனில் காணொளியாக எடுத்து வெளியிட்டதில், பூசாரி மீது நடவடிக்கை எடுக்க பலரும் கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர்.
இதனிடையே, வேலகவுண்டம்பட்டி அடுத்த பொம்மம்பட்டி கிராம அலுவலர் சஞ்சய்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை அடுத்து வேலகவுண்டம்பட்டி பொலிசார் போலி சாமியார் அனில் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற பூசாரிகளை நம்பி பெண்களையும், குழந்தைகளையும் அழைத்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.