நினைத்து பார்க்க முடியாத மட்டத்தில் பொருளாதார வீழ்ச்சி…!!

இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டு அறிக்கைக்கு அமைய அரசாங்கம் அந்த வருடத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 272 பில்லியன் கடனை பெற்றுக்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணம் கோவிட் 19 வைரஸ் என மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் உண்மையில் தற்போதே இலங்கை கோவிட் வைரஸ் தொற்றை கூடுதலாக எதிர்நோக்கி வருகிறது. மத்திய வங்கி முன்வைத்துள்ள தகவல் புள்ளி விபரங்களை ஆராயும் போது, தொற்று நோயை எதிர்கொள்ள முடிந்த பொருளாதாரம் இன்னும் மீதமாக இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு வருடத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 272 பில்லியன் கடனை பெற்று அரசாங்கம் நாட்டின் கடன் பங்கை அதிகரித்துள்ளது.

1948 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இலங்கையின் கடன் தொகையானது 2 ஆயிரத்து 226 பில்லியன். ஆனால் 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் அரசாங்கம் 2 ஆயிரத்து 272 பில்லியனை கடனாக பெற்றுள்ளது.

தற்போது ஒரு மணி நேரத்திற்கு 25 கோடி ரூபாயை கடனாக பெறும் நிலைமைக்கு அரசாங்கம் சென்றுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்கும், நாட்டு மக்களின் உற்பத்திற்கும் பயன்படுத்தவிருந்த பணத்தை அரசாங்கத்தின் இருப்புக்காக கடனாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலைமையை எதிர்கொள்ளக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என அரசாங்கம் கூறுகிறது. பொருளாதாரத்தை உருவாக்குவதை விடுத்து நினைத்து பார்க்க முடியாத மட்டத்தில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.