ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டம் சவரவல்லி கிராமத்தை சார்ந்தவர் சீனிவாசராவ். இவர் எல்.ஐ.சி முகவராக இருந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
இவர்களின் இளைய மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், மூத்த மகள் ரூபா ஸ்ரீ (வயது 22) பார்மசி பயின்று வருகிறார். இந்நிலையில், ரூபா ஸ்ரீயும் இதே கிராமத்தை சார்ந்த வருன்சாய் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களுடைய காதல் விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெற்றோர்களுக்கு தெரியவந்த நிலையில், மகளை கண்டித்துள்ளனர். காதலில் உறுதியாக இருந்த ரூபாஸ்ரீ வருணை தான் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ரூபாவுக்கு மணமகன் தேடும் பணியில் பெற்றோர் ஈடுபட்டு வந்த நிலையில், தனக்கு பிற வரன்கள் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி ரூபஸ்ரீயின் தாயார் லட்சுமி வீட்டில் மயங்கி இருப்பதாக கூறி, அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்த ரூபா அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார்.
லட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கவே, இந்த விஷயம் தொடர்பாக சீனிவாசராவ் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
லட்சுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்கையில், அவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தது அம்பலமானது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு அருகேயுள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்கையில், சம்பவத்தன்று ரூபாஸ்ரீயின் வெற்றிக்கு வருன்சாய் வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேகமடைந்த காவல் துறையினர் ரூபா ஸ்ரீ மற்றும் வருண்குமாரின் உரையாடல்களை சோதிக்கையில், லட்சுமியை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டது அம்பலமானது. இருவரையும் பிடித்து விசாரிக்கையில் திருமணத்திற்கு தடையாக இருந்த தாயை கொலை செய்ய மகளே காதலனை வீட்டிற்கு வரவழைத்து, மகள் தாயின் கைகளை பிடிக்க காதலன் மூக்கில் துணியை அழுத்தி கொலை செய்துள்ளான். காதல் ஜோடிகளை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.