உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இரட்டைச் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் நிகழும் ஆயிரக்கணக்கான மரணங்கள் சக நோயாளிகளையும், பொதுமக்களையும் மிகுந்த மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இரட்டை சகோதரர்களான ஜோஃப்ரெட் மற்றும் ரால்பிரட் கிரிகோரி கொரோனோ தொற்று காரணமாக சில மணி நேரங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1997ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்த இருவரும் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் பிடெக் முடித்தனர். பின்னர் ஜோஃப்ரெட் அக்ஸென்ச்சரிலும் மற்றும் ரால்பிரட் கிரிகோரி ஹூண்டாய் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தனர்.
.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தங்கள் 24வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா உறுதியாக வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்த நிலையில் மே 1 ஆம் தேதி மீரட்டில் உள்ள ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு சகோதரர்கள் இருவருக்கும் கொரோனா நெகட்டிவ் என பரிசோதனை முடிவு வந்தது. ஆனால் அடுத்த மூன்று தினங்களில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததில் முதலில் ஜோஃப்ரெட் உயிரிழக்க அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரால்பிரட் தனது சகோதரர் குறித்து பெற்றோரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவசர சிகிச்சைக்காக ஜோஃப்ரெட் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ரால்பிரட் “நீங்கள் பொய் சொல்கிறீர்கள்” என கூறியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் ரால்பிரட்டும் உயிரிழக்க குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
இரட்டைச் சகோதரர்கள் இருவரும் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரையும் கொரோனா அழைத்துச் சென்றது காலத்தின் கொடூரம் என அவர்களது தந்தை ரபேல் சோகத்துடன் தெரிவித்தார்.