கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்கள் வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். அடுத்த 6 மாதங்களுக்குள் தடுப்பூசி மற்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது பற்றி பேசியபோது, ரஷியாவும், சீனாவும் தங்களது தடுப்பூசிகளால் உலக நாடுகளிடம் செல்வாக்கு செலுத்த முயல்வதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் உலக நாடுகளுக்கு 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கும் அமெரிக்காவின் அறிவிப்பை சீனா வரவேற்றுள்ளது. அதேசமயம் ரஷியா மற்றும் சீனாவின் தடுப்பூசிகள் குறித்த ஜோ பைடனின் கருத்து வெறுக்கத்தக்கது எனவும் சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் இது குறித்து கூறியதாவது:-
தடுப்பூசி உதவி மற்றும் வளரும் நாடுகளுக்கு உறுதியான உதவி ஆகியவற்றின் உறுதிப்பாட்டை அமெரிக்கா வழங்க முடிந்தால் நாங்கள் அதை வரவேற்கிறோம்.
தடுப்பூசிகள் தொடர்பாக அமெரிக்கா சீனாவில் இருந்து ஒரு பிரச்சினையை உருவாக்கி வருகிறது. இது அமெரிக்க நடவடிக்கையின் உண்மையான நோக்கத்தையும், உந்துதலையும் சந்தேகிக்கிறது.
அமெரிக்காவைப் போலல்லாமல், சீனா உலகில் செல்வாக்கு செலுத்தவோ அல்லது வழி நடத்தவோ தடுப்பூசிகளை பயன்படுத்தாது. எங்கள் நோக்கம் உயிரை காப்பாற்ற முடிந்த வரை வளரும் நாடுகளுக்கு உதவுவதை தவிர வேறொன்றுமில்லை.