கோவிட் 19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகளை கருத்திற் கொண்டு, ஆசிய பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் உறவுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று (20) முற்பகல் ஆரம்பமான “ஆசியாவின் எதிர்காலம்” குறித்த 26 ஆவது சர்வதேச மாநாட்டில் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் கருத்துதெரிவித்த ஜனாதிபதி,
ஆசிய நாடுகள் உட்பட குறிப்பாக உலகளவில் நாடுகளுக்கு இடையிலான உறவுகளை விரிவாக்க வேண்டும்.
கோவிட் 19 உலகுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது பல மில்லியன் உயிர்களை காவுகொண்டு, பல மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,
மேலும் உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளை பேரழிவுக்குட்படுத்தியுள்ளது. எந்தவொரு தேசமும் தயாராக இல்லாத மற்றும் முன்னெப்போதும் இல்லாத சவால் உருவாகியுள்ள ஒரு காலத்தில், அனைத்து நாடுகளும் புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையுடன் ஒன்றுபட வேண்டுமென்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்தத் தொற்றுநோய் தேசிய எல்லைகளை மதிக்கவில்லை. வைரஸ் உலகில் எங்கும் பரிசோதிக்கப்படாமல் பரவ அனுமதிக்கப்பட்டால், ஆபத்தான விகாரங்கள் வெளிவரக்கூடும், இது ஏற்கனவே வேறு இடங்களில் தடுப்பூசி மூலம் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை அச்சுறுத்துகிறது.
உற்பத்தி திறன் கணிசமாக மேம்படுத்தப்பட வேண்டும், மேலும் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை உலகளவில் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் விநியோக சங்கிலி தடைகளை விரைவில் வெற்றிகொள்ள வேண்டும்.
இதைச் செய்தால்தான் நாம் இந்த பேரழிவுக்கு ஒரு முடிவைக் காண முடியுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அனைத்து நாடுகளுடனும், குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில் எங்கள் பங்காளர் நாடுகளுடனும் வர்த்தகம் மற்றும் முதலீட்டின் அடிப்படையில் எங்கள் இருதரப்பு உறவுகளை பேண எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜப்பானின் நிக்கெய் (Nikkei) செய்திப் பத்திரிகை 1995 முதல் ஆண்டுதோறும் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து வருகிறது. “கோவிட் நோய்த்தொற்றுக்குப் பிந்திய யுகத்தை வடிவமைத்தல்: உலகளாவிய மீட்பில் ஆசியாவின் பங்கு” என்பது இவ்வருட மாநாட்டின் கருப்பொருளாகும்.
இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அரசியல், பொருளாதார, கல்வி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் உலகில் ஆசியாவின் பங்கு பற்றிய சுதந்திரமான கருத்தை முன்வைப்பதற்கான ஒரு சர்வதேச மாநாடாக கருதப்படுகிறது.
ஒரு தெற்காசிய தேசமாக, சீனா மற்றும் இந்தியாவுடனான உறவை எவ்வாறு சமநிலைப்படுத்துவீர்கள்? என முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி,
இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் பல நூற்றாண்டுகளாக வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளதென்றும் அந்த உறவை பேணுவதாகவும் குறிப்பிட்டார். சீனாவுடனான எங்கள் ஒத்துழைப்பு எமது ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் வர்த்தகப் பாதைகளுக்கு இணையாக உள்ளது.
பல நாடுகளைப் போலவே சீனாவும் இலங்கைக்கு ஒரு முக்கிய முதலீட்டு பங்காளியாக இருந்து வருகிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில், எமது அபிவிருத்தி அபிலாஷைகளை விரைவாகக் கண்காணிக்கவும், எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அனைத்து பங்காளர் நாடுகளின் ஆதரவைப் பெற இலங்கை விரும்புகிறது.
ஆசிய நாடுகள் மற்றும் தொலைதூர நாடுகளுடனான எங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்த தனது அரசு ஆர்வமாக உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உலக அதிகார போட்டிகள் மற்றும் பிராந்திய சக்தி இயக்கவியல் பற்றி நாம் அறிந்திருக்கும் நிலையில், எமது வெளியுறவுக் கொள்கை நடுநிலையானது. இந்தியாவை எங்கள் நெருங்கிய அண்டை நாடாகவும், நீண்டகால நண்பராகவும் நாங்கள் கருதுகிறோம், அவர்களின் பாதுகாப்பு கரிசனைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்க இலங்கையைப் பயன்படுத்த யாரையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அனைத்து நாடுகளின் நலனுக்காக இந்து சமுத்திரம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய இந்தியா மற்றும் அனைத்து பிராந்திய பங்காளிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.