கொரோனா 2-வது அலையில் நடிகர் -நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் சிக்கி வருகிறார்கள். தற்போது நடிகை சம்யுக்தா ஹெக்டேவும் கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். இவர் ஜி.வி.பிரகாசுடன் வாட்ச்மேன், ஜெயம் ரவியின் கோமாளி, வருணுடன் பப்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சம்யுக்தா ஹெக்டேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் சம்யுக்தா ஹெக்டேவின் பெற்றோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
சம்யுக்தா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நண்பர்களே. நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது நான் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி அனைத்து நெறிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறேன். உங்களை கவனித்துக்கொள்ளுங்கள். எனது பெற்றோர் நன்றாக குணமடைந்து வருகிறார்கள். அவர்கள் ஆரோக்கியத்தோடு திரும்பியதற்காக பிரபஞ்சத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.