யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கொரோனா தடுப்பு மையத்திற்கு இன்று இரவு 8.30 மணியளவில் எட்டுமாதக் கர்ப்பவதி ஒருவரை உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் கொண்டுசென்று இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கர்ப்பவதிகள் கொரோனாத் தொற்றுக்குள்ளானால் அவர்களை கொரோனா சிகிச்சை வழங்கக்கூடிய வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பதே நடைமுறை.
இருந்தபோதிலும் இன்று இரவு உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் 08 மாத கர்ப்பவதி ஒருவர் முன் அறிவித்தல் ஏதுமின்றி வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறக்கிவிட்டவுடன் ஏற்றிவந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதனால் அந்தக் கர்ப்பவதியை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவேண்டிய சூழல் வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மைய நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
அதேபோல யாழ்ப்பாணத்தின் சில சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்து தொற்றுக்குள்ளாகும் நோயாளர்கள் இரவு வேளைகளில் அழைத்துச் செல்லப்படுவதாலும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் வட்டுக்கோட்டை கொரோனா தடுப்பு மைய நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.