இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து தப்பி வந்து கணவன் சிதையில் தீவைத்து மனைவி இறுதிச்சடங்கு நடத்தியுள்ளார்.
பீகாரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. விகாஸ் மண்டல் (28) என்ற நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மனைவி காஞ்சன் தேவி அவரை மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி விகாஸ் கடந்த 13ஆம் திகதி உயிரிழந்தார். இதன்பின்னர் கணவர் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் உதவியை தேவி நாடிய நிலையில் யாருமே உதவ முன்வரவில்லை.
பின்னர் தேவியின் தாயார் மட்டும் அவருடன் வந்தார். இருவரும் சேர்ந்து மேலும் சிலரிடம் உதவி கேட்டும் யாரும் உதவவில்லை.
இதனிடையில் தேவியின் உறவினர்கள் சிலர் அவருக்கு உதவுவதற்கு பதிலாக இது குறித்து சுகாதார அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.
புகாரையடுத்து அதிகாரிகள் தேவியை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அடைத்தனர். அங்கிருந்து தப்பி ஓடிய தேவி நேராக விகாஸ் சடலம் வைக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று கெஞ்சி சடலத்தை வாங்கினார்.
பின்னர் சிலரின் உதவியுடன் ஆம்புலன்ஸில் சடலத்தை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று தனி ஆளாக தகனம் செய்துள்ளார்.