இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு வைத்த புதிய ஆப்பு…

இந்திய அணி, ஜூலை மாதம் இலங்கை சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவுள்ளது.

இந்த நிலையில், சம்பளம் பிரச்சினை காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும், வீரர்களுக்கும் இடையில் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா, இலங்கை பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதில், இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் 24 வீரர்களுக்கான ஒப்பந்தத்தை அறிவித்தது. புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடல் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது.

மேலும், 2019ஆம் ஆண்டு முதல் சிறப்பாக விளையாடியதற்காக 50 சதவீதமும், உடற்தகுதிக்கு 20 சதவீதமும், தலைமைப் பண்பு, அணிக்கான பங்களிப்பு போன்றவைக்காக 10 சதவீதம் என வீரர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறைக்கு வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததுள்ளது. இதுதொடர்பாக வீரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஒப்பந்தம் நியாய மற்றது. வெளிப்படைத்தன்மை இல்லாதது. இதில் கையெழுத்திட நாங்கள் விரும்பவில்லை. வீரர்களை துப்பாக்கி முனையில் நிறுத்த வேண்டாம்.

மேலும், புதிய விதிமுறைகளின் படி ஒவ்வொரு வீரரும் எத்தனை புள்ளிகள் சேர்த்துள்ளார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதர நாட்டு கிரிக்கெட் வாரியங்களை சேர்ந்த வீரர்களின் சம்பளத்தை விடவும் எங்களுடைய சம்பளம் 3 மடங்கு குறைவாக உள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் சரியான முறையில் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் அனைத்து வீரர்களும் ஒப்பந்தத்தில் வருகிற 3-ந் தேதிக்குள் கையெழுத்திட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், ஒருவேளை வீரர்கள் கையெழுத்திட மறுக்கும் பட்சத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.