தமிழர் பகுதியில் திருடச் சென்ற இளைஞனிற்கு நேர்ந்த விபரீதம்!

மன்னார் மூர் வீதி, குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுகளின் நீண்ட நாட்களாக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (22) மாலை அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் திருட முற்பட்ட போது அப்பகுதி இளைஞர்களினால் மடக்கி பிடிக்கப்பட்டார்.

குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக கோழிகள் திருட்டுப் போவதோடு, வீடுகளில் உள்ள துவிச்சக்கர வண்டிகள் உற்பட பெறுமதியான பொருட்கள் நாளாந்தம் திருட்டு போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

திருட்டுச் சம்பவத்துடன் ஈடுபடும் குறித்த இளைஞனை மன்னார் பொலிஸார் கைது செய்தாலும் உடனடியாக குறித்த நபரை விடுவித்து விடுவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை -மன்னார் மூர்வீதி, குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருட முற்பட்ட போது அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து குறித்த திருட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து கட்டி வைத்தனர். பின்னர் பொலிஸ் அவசர தொலைபேசிக்கு 119 தொடர்பை ஏற்படுத்திய போது 2 பொலிஸார் வருகை தந்தனர்.

பின்னர் குறித்த நபரை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் முறைப்பாடு செய்ய 4 பேரை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு வரும்படி கூறி இருந்தனர்.

இந்த நிலையில் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று பின்னர் விடுவித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதிகளில் இரவு பகல் பாராது குறித்த இளைஞன் மற்றும் அவரது குழுவினரால் இப்பகுதியில் திருட்டுச் சம்பவம் இடம் பெற்று வருகின்ற போதும், குறித்த இளைஞன் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப் படுகின்ற போது பொலிஸார் குறித்த நபரை விடுவிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்தனர்.