பிலிப்பைன்சின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜோஸ் அபாட் சாண்டோஸ் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 113 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக பிலிப்பைன்ஸ் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. உள்ளூர் நேரப்படி காலை 10:02 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்
சில வினாடிகள் நீடித்தது. அப்போது வீடுகள் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை. அதேபோல் இந்த நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.