யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் 130 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்.தொண்டமானாறுப் பகுதியில் 130 கிலோ கஞ்சா போதைப்பொருள் இராணுவத்தினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

தொண்டமானாறு கடல் வழியாகக் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என ஊரிக்காடு இராணுவ முகாமையைச் சேர்ந்த இராணுவத்தினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் , கடற்கரைப் பகுதியில் இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதலை நடத்தினர்.

அதன்போது பொதி செய்யப்பட்ட நிலையில் கடற்கரை பற்றை காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 130 கிலோ கஞ்சாவை அவர்கள் மீட்டனர்.

இது தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு அறிவித்த இராணுவத்தினர் மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.