இந்தியாவில் தாய் உயிரிழந்த செய்தியை அறிந்தும் 15 கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கடமையில் தவறாமல் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் மதுராவில் கடந்த 9 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருப்பவர் பிரபத் யாதவ். இவருக்கு சமீபத்தில் குடும்பத்தாரிடம் இருந்து வந்த போன் அழைப்பில், தாயார் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த துக்கமான செய்தியை கேட்டபின்னரும் தயாராக இருந்த 15 கொரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸில் பாதுகாப்பாக யாதவ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
பின்னர் அதே நாளில் தனது சொந்த கிராமமான மயின்புரிக்கு 200 கிலோ மீட்டர் பயணம் செய்து தனது தாயாருக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு மீண்டும் உடனடியாக பணிக்கு திரும்பியிருக்கிறார்.
ஏற்கனவே கடந்தாண்டு ஜூலை மாதம் யாதவ் தந்தை கொரோனாவால் இறந்த நிலையில் அவருக்கு இறுதிச்சடங்கு நடத்திவிட்டு உடனடியாக தனது பணிக்கு யாதவ் திரும்பியதும் தெரியவந்துள்ளது.
யாதவ் கூறுகையில், என் தாயார் இறந்த தகவல் கிடைத்ததும் என் உடல் நடுங்கியது, ஆனால் அதை பொறுத்து கொண்டேன்.
பின்னர் என்னை நம்பி கொடுத்த பணி தான் முக்கியம் என முடிவெடுத்து நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.
என் தாயார் போய்விட்டார்! என்னால் சிலரின் உயிரை காப்பாற்ற முடிந்தால் அதை நினைத்து அவர் பெருமைப்படுவார் என கூறியுள்ளார்.