வைரமுத்துக்கு ஆதரவாக பாரதிராஜா…

மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. கவிஞர் வைரமுத்து, ஓ.என்.வி விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்தது. இதனால், ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் பாரதிராஜா, வைரமுத்து ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரளச் சகோதரர்களின் பேரன்பினால், மலையாள இலக்கியத்தின் உயரிய விருதான ஓ.என்.வி, எங்கள் கவிப்பேரரசு அவர்களுக்கு அறிவித்தது அறிந்து மகிழ்வுற்றேன்.. ஆனால் அரசியல் நெருக்கடியால் மறுபரிசீலனை என தற்போது செய்திகள் வந்திருப்பதை கண்டு வருத்தம் சிறிதளவும் இல்லை.

சமீபகாலமாக எம் இனத்தின் மீதும் மொழி மீதும் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டு எங்கிருந்தோ தனிமனித மாண்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில நபர்களை கொண்டு மதம், இனம், மொழியாக பிரிவினை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப் பட இயலாத போரினை தொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரசு என்கிற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்துவிடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும். தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாக மாண்புமிகு தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர். மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

‘இந்த குளத்தில் கல்லெரிந்தவர்கள்” எறியட்டும் அவர்களின் தாகம் தீரட்டும். குளம் என்பது கானல் நீர், நீ சமுத்திரம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.