உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வார பாதிப்பு குறித்த புள்ளி விவரம் வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:-
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 14 சதவீதம் குறைந்திருக்கிறது.
உயிரிழப்பவர்களின் விகிதம் 2 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த வாரம் 41 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்புக்கு 84 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
புதிய உருமாறிய பி.1.617 கொரோனா வைரஸ் வகை முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த வகை கொரோனா இப்போது 53 நாடுகளில் பரவி இருக்கிறது. இந்த பி.1.617.1, வைரஸ் வகை இப்போது பி.1.617.2 மற்றும் பி.1.617.3 என்ற மூன்று உருமாற்றங்களை அடைந்துள்ளது.
இதில் பி.1.617.1 வகை கொரோனா 41 நாடுகளில் காணப்படுகிறது. பி.1.617.2 வகை கொரோனா 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை கொரோனா 6 நாடுகளிலும் காணப்படுகிறது.
பி.1.617 கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய வகை என்ற பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்றும், அதன் நோய் தாக்கமும், மறுபாதிப்பு அபாயம் குறித்த விவரங்கள் ஆய்வில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, முந்தைய 7 நாட்களில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 18 லட்சத்து 46 ஆயிரத்து 55-ஆக பதிவாகி உள்ளது. இது முந்தைய வார பாதிப்பை விட 23 சதவீதம் குறைவாகும்.
அதுபோல் அமெரிக்கா, கொலம்பியா நாடுகளிலும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 410-ஆக பதிவாகி, பாதிப்பு விகிதம் 20 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. கொலம்பியாவில் புதிய பாதிப்பு 1 லட்சத்து 7 ஆயிரத்து 590-ஆக பதிவாகி பாதிப்பு விகிதம் 7 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது.
அதேநேரம் பிரேசிலில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 424-ஆக பதிவாகி, பாதிப்பு விகிதம் 3 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. அர்ஜென்டீனாவில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 46-ஆக பதிவாகி பாதிப்பு விகிதம் 41 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு விகிதம் கடந்த 4 வாரங்களாக குறைந்து வருகிற போதிலும், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. பல நாடுகளில் உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முந்தைய வார உயிரிழப்புகளை விட 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 2.1 நபர்கள் என்ற விகிதத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இது 4 சதவீதம் அதிகரிப்பாகும்.