மக்களின் சடலங்கள் மீது ஏறியேனும் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற இலக்கில் அரசாங்கம் இருந்ததாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நாளுக்குநாள் கொரோனா தொற்றுக்கு இலக்காகிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்திலும் கொரோனா கொத்தணி ஏற்பட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவே காரணம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்கொண்டிருக்கின்ற நெருக்கடிமிக்க நிலைமைக்கு அவரே காரணம்.
சபாநாயகரது அலுவலகம், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் மற்றும் படைக்கள சேவிதர் அலுவலகம் என கொரோனா தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டிருப்பதால், நாடாளுமன்ற அமர்வினை ஒத்திவைக்கும்படி எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகரிடம் கேட்டபோது அதனை அவர் நிராகரித்ததாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.