9 வயது மகனை கருணைக்கொலை செய்ய கோரிய பெற்றோர்! சிறிது நேரத்தில் உயிரிழந்த சிறுவன்…

இந்தியாவில் 5 வயதில் இருந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனை கருணை கொலை செய்ய பெற்றோர் அனுமதி கேட்க நீதிமன்றம் வந்த நிலையில் வீட்டுக்கு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரிஜிபள்ளி கிராமத்தை சேர்ந்த மணி, அருணா தம்பதியின் 9 வயது மகன் ஹர்ஷவர்தன்.

அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். நான்கு ஆண்டுகளுக்கு முன் வீட்டின் மேல்மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தான்.

பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹர்ஷவர்தன் உடல்நிலை தேறி பள்ளிக்கு சென்று வந்தான். இந்த நிலையில் திடீரென்று அவனுடைய கண்கள், வாய், மூக்கு, ஆசனவாய் ஆகியவற்றிலிருந்து ரத்தம் வெளிப்படத் துவங்கியது.

எனவே அவனை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனாலும் நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை.

இதற்கு மேலும் மகனுக்கு சிகிச்சையளிக்க வசதி இல்லாததால் அவன் பெற்றோர் தவித்து வந்தனர். இதையடுத்து இனிமேல் தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கருதிய ஹர்ஷவர்தன் பெற்றோர் மகனை கருணை கொலை செய்ய அனுமதி வேண்டி புங்கனூர் நீதி மன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நீதிமன்றத்துக்கு விடுமுறை ஆகையால், மகனை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பி சென்றனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக ஹர்ஷவர்தன் வீடு திரும்பும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பலத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.