தாகத்திற்கு தண்ணீர் கேட்ட இளைஞரை அடித்து சிறுநீரை குடிக்க வைத்த பொலிஸ் அதிகாரி!

பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் அடித்து சிறுநீரை குடிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

கர்நாடகா மாநிலத்திலே இக்கொடூரு சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 22 வயதான புனித் என்ற இளைஞர், தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சிக்கமகளூரு காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அக்‌ஷய் எம் ஹக்கே மற்றும் பிற மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த மாதம் புனித் காவலில் வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

அப்போது, அங்கிருந்த துணை ஆய்வாளர் அர்ஜுன் கவுடா, மற்றொரு கைதியை சிறுநீர் கழிக்க சொல்லி புனித்தை அடித்து துன்புறுத்தி அதை குடிக்க வைத்துள்ளார்.

புனித் மூத்த அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து, மே 22ம் திகதி அன்று சிக்கமகளூரில் உள்ள கோனிபீது காவல் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி அர்ஜுன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் முன் ஜாமீன் கோரி கர்நாடகா நீதிமன்றத்தில் அர்ஜுன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதை விசாரித்த நீதிபதி, இந்த சம்பவத்தின் கூறப்படும் குற்றத்தின் தன்மை மிகவும் கொடூரமானது. இத்தகைய கொடூரமான செயல் எந்தவொரு நபரின் தனிப்பட்ட கண்ணியத்தையும் சிதைக்கிறது என கூறி முன் ஜாமீன் அளிக்க மறுத்துள்ளார்.