சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரித்திகா சிங், தேசிய குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிச்சுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை விட்டு முழு நேர நடிகை ஆனார்.
ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு பதிப்பான குரு படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை.
தற்போது புதிய பட வாய்ப்புகளும், கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகளும் இல்லாததால் மீண்டும் குத்துச் சண்டைக்கே திரும்ப ரித்திகா சிங் முடிவு செய்து இருக்கிறார். தனி பயிற்சியாளரை நியமித்து வீட்டிலேயே குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.