ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எவ்வித தாக்குதலும் நடத்தப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.
6 இணையத்தளங்களில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதே தவிர சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், இலங்கை நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட மேலும் சில இணையத்தளங்களே தொழில்நுட்பக்கோளாறுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போலியான தகவலை பகிர்ந்த இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்ட மெத்தீவை, ஸ்ரீலங்கா பொலிஸின் கணினிக் குற்றப்பிரிவுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை இணையத்தளங்களை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் ஈடுபட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.