இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. முதலாவது அலையை காட்டிலும் இரண்டாவது அலை மிகவும் கடுமையாக உள்ளது. கொரோனா குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் ஆங்காங்கே விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்து வருகிறது.
தெலங்கானாவை சேர்ந்த ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட தன் மனைவியை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வீட்டின் வெளியே உள்ள குளியலறையில் அவரை தங்கவைத்துள்ளார். அக்கம்பக்கத்தினரின் புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர்.
தெலங்கானா மாநிலம் கோபால்பேட் கிராமத்தை சேர்ந்தவர் பெத்தய்யா. இவரது மனைவி நார்சம்மா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனை செய்ததில் இவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதால் அவரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆறுதல் கூறி அரவணைக்க வேண்டிய குடும்பம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நார்சம்மாவை அவரது கணவர் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
வீட்டிற்கு வெளியில் உள்ள குளியலறையில் அவர் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு பாய் மற்றும் தலையணைகள் கொடுத்தனர். இயற்கை உபாதைகளை கழிக்க கூட அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதன்காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நார்சம்மா தான் வசித்துவரும் கிராமத்திற்கு வெளியே சென்று இயற்கை உபாதைகளை கழிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார். பெத்தயாவின் செயலை கண்ட கிராம மக்கள் இதுகுறித்து உள்ளூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து பெத்தையா வீட்டிற்கு விரைந்த காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நார்சம்மாவை கொரோனா சிகிச்சை முகாமிற்கு அனுப்புமாறு கூறியுள்ளார். நார்சம்மா முகாமுக்கு வர மறுத்துவிட்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் பேசினர். கொரோனா தொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வீட்டிலேயே ஒரு அறையில் நர்சம்மாவை தனிமைப்படுத்த வேண்டும் என கணவர் பெத்தய்யாவிடம் வலியுறுத்தினர். அதிகாரிகளின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் நார்சம்மா வீட்டிலேயே ஒரு அறையில் தனிமைப்படுத்த அவரது கணவர் ஒத்துக்கொண்டார்.