இலங்கையில் கனமழைக்கு 14 பேர் பலி!

இலங்கையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ரத்னபுரா உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. 15,658 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 800-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

10 மாவட்டங்களில் 60,974 குடும்பங்கள், 2,45,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களும் நீரில் மூழ்கின. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ராணுவம் மற்றும் கப்பல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வரும் நாட்களில் 150 மிமீ அளவுக்கு மழை பெய்யலாம் என்றும் குறிப்பாக கடுமையான மின்னலிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இலங்கை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.