தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுமணத்தம்பதி ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தை மணி (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டுனராக வேலை செய்து வந்தார்.
அதே சூளையில் நவமால்மருதூரை சேர்ந்த சவிதா (25) என்பவரும் வேலை செய்து வந்தார். அப்போது மணிக்கும், சவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே காதலாக மலர்ந்தது.
பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 40 நாட்கள் கருவுற்றிருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சவிதாவுக்கு கரு கலைந்துவிட்டது.
இதனால் கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இருவரும் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டு வந்ததோடு வாழ்க்கையில் வெறுப்படைந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உள்ள மின்விசிறியில் ஒரே கயிற்றில் மணியும், அவரது மனைவி சவிதாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, புதுமணத்தம்பதி சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவலின்பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணி, சவிதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில், கரு கலைந்ததால் மன உளைச்சலில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.