பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபருக்கு 4 மாதம் சிறை… வெளியான முக்கிய தகவல்!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார்.

அப்போது‌‌ தன்னை வரவேற்க பள்ளிக்கூடத்துக்கு வெளியே காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கை குலுக்க சென்றபோது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ஒருவர் திடீரென அதிபர் மெக்ரான் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மெக்ரானை கன்னத்தில் அறைந்த டேமியன் தாரெல் என்கிற வாலிபரையும், இந்த சம்பவத்தை தனது செல்போனில் படம் பிடித்த மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே வாலிபர் தனது கன்னத்தில் அறைந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை எனக்கூறிய‌ மெக்ரான் தனிப்பட்ட முறையில் அந்த வாலிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என ‌ கூறியிருந்தார்.

இந்நிலையில், அதிபர் மெக்ரானை கன்னத்தில் அறைந்தது தொடர்பாக டேமியன் தாரெலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிபரை கன்னத்தில் அறைந்ததை ஒப்புக்கொண்ட டேமியன் தாரெல், எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்கிற நோக்கில் இதை செய்ததாக கூறினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்த நீதிபதிகள், அதில் 14 மாதங்களை ரத்து செய்துவிட்டு 4 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.