யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரத்தில் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் சிக்கிய ஆசாமி….

யாழ்ப்பாணம் – சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள், பணம் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்தாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் கந்தரோடை பாரதி வீதியில் உள்ள வீடோன்றில் நேற்று மாலை வீடுடைத்து 21 பவுண் தாலிக்கொடி, மூக்குத்தி, உண்டியல் பணம் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன திருடப்பட்டன.

வீட்டில் இருந்தவர்கள் அயலில் உள்ள காணி துப்புரவு செய்ய சென்றிருந்த வேளையிலேயே இந்த திருட்டு இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் நேற்று மாலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸின் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேக நபரை இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த நபர் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.