இலங்கையின் திறைசேரியின் பணத்தைப் பயன்படுத்தி வரி இல்லாத “எஸ்யூவி” வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான முடிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அளித்த ஆலோசனையின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்றுகள் அதிகரித்துள்ளபோது நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்தக்கூடாது என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளதாக ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த வாகன இறக்குமதி திட்டம் நீண்ட காலத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்ட ஒன்று என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், “களப்பணிக்கான வாகனங்களை கொள்வனவு செய்தல்” என்ற தலைப்பில் நிதியமைச்சரான பிரதமரால் கொரோனா அதிகரித்த நிலையில் இருந்த 2021, மே 18ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த தொற்றுநோய் அதிகரித்துள்ளது. அத்துடன் மற்றும் எஸ்யூவி வாகனங்கள் தேடப்படும் நேரத்தில் அவற்றின் விலையும் உயர்வாகவே இருந்தது என்பது பல தரப்பாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் அமைச்சரவை அனுமதி கிடைக்கும் முன்னரே 2021, மே 22ஆம் திகதி வாகன இறக்குமதிக்கான வங்கிக்கடன் கடிதங்கள் திறக்கப்பட்டதை ஏற்கனவே ஜேவிபியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை அமைச்சர் ரம்புக்வெல்ல கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் கருத்துரைத்தபோது வங்கிக்கடன் கடிதங்களை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ய முடியாது என்று கூறியிருந்ததை ஆங்கில செய்தித்தாள் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே “டொயோட்டா” வாகன நிறுவத்தின் முக்கிய வாடிக்கையாளரான இலங்கை அரசாங்கத்தினால் இந்த வாகன இறக்குமதி விடயத்தில் குறித்த நிறுவனத்துடன் இணக்கத்துக்கு செல்லமுடியாமல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.