தினமும் பால் குடித்தால் உடலில் இந்த பிரச்சினை ஏற்படுமா?! வெளியான தகவல்!

தினமும் பால் அருந்தி வந்தால் பெரியவர்களுக்கு கொலஸ்டிரால் அதிகரிக்கும், உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து உள்ளது.

ஆனால் இது தவறாகும்! ஏனெனில், பால் குடிப்பதால் உடலின் கொழுப்பு அளவு அதிகரிக்காது என்று 20 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்டர்நேஷனல் ஜேர்னல் ஆஃப் ஒபிசிடி என்ற மருத்துவ ஆய்விதழில் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.

அதில், தினமும் பால் அருந்தி வருபவர்களுக்கு பால் அருந்தாதவர்களைக் காட்டிலும் கொலஸ்டிரால் அளவு குறைவாக உள்ளது. அது எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பாக இருந்தாலும் சரி, எச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பாக இருந்தாலும் சரி என்று கண்டறிந்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து பால் அருந்தி வருபவர்களுக்கு இதய ரத்த நாள அடைப்பு நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 14 சதவிகிதம் அளவுக்கு குறைவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து இங்கிலாந்தின் யூனிவர்சிட்டி ஆஃப் ரீடிங் நியூட்ரோஜெனிட்டிக்‌ஸ் துறை பேராசிரியர் விமல் கராணி கூறுகையில், பால் குடிப்பதால் கொலஸ்டிரால் அளவு அதிகரிக்காது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினசரி அதிக அளவில் பால் எடுத்துக்கொள்பவர்களுக்கு மரபணு அளவில் மாறுபாடு இருப்பதும், அதிக பி.எம்.ஐ, உடல் கொழுப்பு இருந்தாலும் கெட்ட மற்றும் நல்லக் கொழுப்பு குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளோம்.

இதன் காரணமாக அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. இதய நோய்களைத் தவிர்க்க தினசரி பால் அருந்துவதைக் குறைத்துக்கொள்வது நல்ல தீர்வாக இருக்காது என்று கண்டறிந்துள்ளோம் என்றார்.

இந்த ஆய்வு பால் அருந்துவதால் பி.எம்.ஐ, உடலின் கொழுப்பு சற்று அதிகரித்தாலும் கொலஸ்டிரால் அளவு அதிகரிக்காது என்பதை உறுதி செய்துள்ளது.