நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் வீழ்ச்சி அடையக் கூடும் என ஆளும் அரசாங்கத்தில் உள்ள சிறு கட்சிகள் பல ஒன்றிணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையால் இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கூட்டணி சிறு கட்சிகள் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தை அமைச்சர் உதய கம்மன்பில மீது சுமத்தி ஏனையவர்கள் தப்பிக்க முடியாது எனவும் இது அரசாங்கம் எடுத்த தீர்மானம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எங்கள் மக்கள் சக்தி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, தேசிய காங்கிரஸ், ஶ்ரீலங்கா கொமியூனிஸ்ட் கட்சி, ஶ்ரீலங்கா மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டு அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.