எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்த அமைச்சரவை தீர்மானத்தை எதிர்த்து கருத்துக்களை முன்வைத்தமை மற்றும் அமைச்சர் உதய கம்மன்பிலவைப் பதவி விலக வலியுறுத்திய விடயங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் விசாரணைகளை நடத்தி அரசுக்குள் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன்.
இவ்வாறு பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் வாக்குறுதியளித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசைப் பிளவுபடுத்த அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்தின் செயற்பாடுகள் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியின் அனுமதியுடன் நிதி அமைச்சர் என்ற வகையில் தான் கையொப்பமிட்டு அமைச்சரவையிலும் அனுமதி பெறப்பட்டு தீர்மானமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு விடயம் குறித்து கட்சியின் அனுமதி இல்லாது பொதுச்செயலாளர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறித்து சாகர காரியவசத்திடம் விசாரணைகளை நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அரசுக்குள் ஏற்பட்டுள்ள சிறிய கருத்து முரண்பாடுகளைச் சரி செய்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் விடயங்கள் அரசுக்குள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அரசைப் பலப்படுத்தும் நடவடிக்கையை எடுப்பதாகவும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.