தமிழக அரசின் செயலுக்கு ஓபிஎஸ் கடும் விமர்சனம்..!!

நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்து விட்டு, தற்போது தேர்வுக்கு தயாராக வேண்டும் என தமிழக அரசு கூறியிருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய மற்றும்‌ மாநில அரசுகளின்‌ சார்பில்‌ நடத்தப்படும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுகள்‌ ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்‌, ஆன்லைன்‌ மூலம்‌ ‘நீட்‌’ பயிற்சியை தொடர கல்வித்‌ துறை உத்தரவிட்டதன்‌ காரணமாக மாணவர்கள்‌ மத்தியில்‌ குழப்ப நிலை நிலவி வருவதைச்‌ சுட்டிக்காட்டினால்‌, ‘நீட்‌’ தேர்வு மற்றும்‌ ‘நீட்‌’ தேர்வு பயிற்சிகள்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சிக்‌ காலத்தில்‌ கொண்டு வரப்பட்டதாக மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ கூறியிருப்பது முழுப்‌ பூசணிக்காயை சோற்றில்‌ மறைப்பது போல்‌ உள்ளது.

மருத்துவச்‌ சேர்க்கைக்கு ‘நீட்‌’ தேர்வு என்பதற்கான அறிவிக்கை இந்திய மருத்துவக்‌ கழகத்தால்‌ b21-12-2010 அன்று வெளியிடப்பட்டு, அது 27-12-2010 ஆம்‌” நாளிட்ட மத்திய அரசிதழில்‌ வெளியாகியுள்ளது. இந்தத்‌ தருணத்தில்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சிப்‌ பொறுப்பில்‌ இருந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ என்று மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ தனது பேட்டியில்‌ குறிப்பிட்டிருக்கிறார்‌. தவறுதலாக குறிப்பிட்டிருக்கிறார்‌ என்று நினைக்கிறேன்‌.

2006 முதல்‌ 2011 வரை திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ தான்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சியில்‌ இருந்தது. தமிழ்நாட்டில்‌ மட்டுமல்ல மத்தியிலும்‌ தி.மு.க. அங்கம்‌ வகித்த காங்கிரஸ்‌ ஆட்சிதான்‌ நடைபெற்றது என்பதைச்‌ சுட்டிக்காட்ட விரும்புகிறேன்‌. எனவே, ‘நீட்‌’ தேர்வு என்பது தி.மு.க. ஆட்சிக்‌ காலத்தில்‌, மத்திய அரசில்‌ தி.மு.க. அங்கம்‌ வகித்த காலத்தில்‌ கொண்டுவரப்பட்டது என்பதற்கு இதைவிட ஒர்‌ ஆதாரம்‌ தேவையில்லை.

அடுத்தபடியாக, 2011 ஆம்‌ ஆண்டு தி.மு.க. தலைவர்‌ தான்‌ சென்னை உயர்‌ நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை பெற்றார்‌ என்று தனது பேட்டியில்‌ மாண்புமிகு அமைச்சர்‌ அவர்கள்‌ குறிப்பிட்டார்‌. அப்போது மாநிலத்தில்‌ தி.மு.க. ஆட்சி, மத்தியில்‌ தி.மு.க. அங்கம்‌ வகிக்கும்‌ காங்கிரஸ்‌ ஆட்சி. ‘தி.மு.க. தலைவரின்‌ ஆலோசனையை அடிக்கடி கேட்டுக்‌ கொண்டிருக்கிறேன்‌’ என்று 13-3-2010 அன்று நடைபெற்ற புதிய தலைமைச்‌ செயலகத்‌ திறப்பு விழாவில்‌ அப்போதைய மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களே குறிப்பிட்டிருந்த நிலையில்‌, மத்திய அரசுக்கு அழுத்தம்‌ கொடுத்து
இந்திய மருத்துவக்‌ கழகத்தால்‌ வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்பப்‌ பெறாமல்‌, எதற்காக தி.மு.க. உயர்‌ நீதிமன்றத்தை நாடியது என்பதுதான்‌ கேள்வி, மத்திய அமைச்சரவையில்‌ பிற கட்சிகள்‌ அங்கம்‌ வகித்தால்‌, அந்தக்‌ கட்சிகளும்‌ மத்திய அரசின்‌ அங்கமாகத்தான்‌ கருதப்படும்‌.

இவ்வாறு மத்திய அரசின்‌ அங்கமாக இருந்து சட்டம்‌ போட்டுவிட்டு, நீதிமன்றத்தை நாடியது என்பது முறைதானா என்பதை மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ சிந்திக்க வேண்டும்‌.

நீட்‌’ நுழைவுத்‌ தேர்வை நடத்துவதற்கான அறிவிக்கையினை மத்திய அரசு வெளியிட்ட உடனேயே அதனைத்‌ திரும்பப்பெற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்‌ அல்லது மத்திய அரசிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. அவ்வாறு செய்யாமல்‌, மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, அதன்மூலம்‌ அந்த அறிவிக்கைக்கும்‌ மறைமுகமாக ஆதரவு அளித்துவிட்டு, இப்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ தான்‌ காரணம்‌ என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எனது கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

‘நீட்‌’ தேர்விற்கு முழுக்‌ காரணம்‌, மூலக்‌ காரணம்‌ திராவிட முன்னேற்றக்‌ கழகம்தான்‌ என்பதை அழுத்தந்திருத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்‌. அப்போதே, ‘ஆதரவு வாபஸ்‌’ என்ற ஆயுதத்தைப்‌ பயன்படுத்தி இருந்தால்‌, இந்திய மருத்துவக்‌ கழகத்தின்‌ அறிவிக்கை திரும்பப்‌ பெறப்பட்டு இருக்கும்‌, ‘நீட்‌’ தேர்வு என்ற பிரச்சனையே இருந்திருக்காது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும்‌.

இந்த ஆண்டைப்‌ பொறுத்தவரையில்‌, கொரோனா தொற்று காரணமாக மாணவ, மாணவியரின்‌ பாதுகாப்பு கருதி, மத்திய மற்றும்‌ மாநில அரசுகளால்‌ நடத்தப்படும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுகளே ரத்து செய்யப்பட்டிருக்கும்‌ நிலையில்‌, ‘நீட்‌’ தேர்வு நடத்துவதற்குரிய வாய்ப்புகள்‌ இல்லை என்று மாணவ, மாணவியர்‌ நினைத்துக்‌ கொண்டிருந்த நேரத்தில்‌, ‘நீட்‌ தேர்விற்கு ஆன்லைனில்‌ பயிற்சி’ என்ற அறிவிப்பு மாணவர்களையும்‌, பெற்றோர்களையும்‌ குழப்பத்தில்‌ ஆழ்த்தியுள்ளது என்பதை அரசின்‌ கவனத்திற்கு கொண்டு வருவதற்காக நான்‌ அறிக்கை வெளியிட்டதையடுத்து, இந்த நிமிடம்‌ வரை நீட்‌ தேர்வு உண்டு’ என்று அரசின்‌ சார்பில்‌
தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.

‘தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்‌, நீட்‌ தேர்வு ரத்து செய்யப்படும்‌’ என தேர்தல்‌ பிரச்சாரத்தின்போது அறிவித்துவிட்டு, தற்போது ‘இந்த நிமிடம்‌ வரை நீட்‌ தேர்வு உண்டு’ என்று அறிவித்து இருப்பது சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதை எடுத்துக்காட்டுகிறது

‘நீட்‌’ தேர்வுக்கு பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சிக்‌ காலத்தில்தான்‌ என்று மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ கூறி இருக்கிறார்‌. ‘நீட்‌’ தேர்விற்கு வித்திட்டுவிட்டு, அதற்கு பயிற்சி அளிப்பதை குறை கூறுவது எவ்விதத்தில்‌ நியாயம்‌? 2010-ஆம்‌ ஆண்டே தி.மு.க. அப்போதைய மத்திய அரசிற்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்‌ பெற்றிருந்தால்‌, நீட்‌ தேர்வும்‌ வந்திருக்காது, பயிற்சியும்‌ இருந்திருக்காது என்பதை நான்‌ கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்‌.

ஆட்சியில்‌ இருந்தாலும்‌, ஆட்சியில்‌ இல்லாவிட்டாலும்‌, ‘நீட்‌’ தேர்விற்கு எதிராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ தொடர்ந்து குரல்‌ கொடுத்து கொண்டு வருகிறது. மாண்புமிகு இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ மாண்புமிகு இந்தியப்‌ பிரதமருக்கு கடிதங்கள்‌ மூலமாகவும்‌, நேரிலும்‌ ‘நீட்‌’ தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தினார்கள்‌. தன்‌ இறுதி மூச்சு வரை ‘நட்‌’ தேர்வினை எதிர்த்தவர்‌ மாண்புமிகு இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌, மாண்புமிகு அம்மா அவர்களின்‌ வழியில்‌ செயல்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக்‌ கழக அரசு, 2017 ஆம்‌ ஆண்டு அதற்காக தனிச்‌ சட்டத்தை இயற்றி மேதகு இந்தியக்‌ குடியரசுத்‌ தலைவருக்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல்‌, நீட்‌ தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று கடிதங்கள்‌ வாயிலாகவும்‌, மாண்புமிகு இந்தியப்‌ பிரதமரை நேரில்‌ சந்தித்தும்‌ வலியுறுத்தியது என்பதை இந்தத்‌ தருணத்தில்‌ தெரிவித்துக்‌ கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்‌.

நீட்‌ தேர்வினால்‌ கிராமப்புற ஏழையெளிய மாணவ, மாணவியர்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌ என்பதை அறிந்த மாண்புமிகு அம்மா அவர்களின்‌ வழிகாட்டுதலோடு நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக அரசு, மருத்துவப்‌ படிப்புகளில்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும்‌ சட்டத்தை நிறைவேற்றி, அதன்‌ அடிப்படையில்‌ மருத்துவச்‌ சேர்க்கையினை நடத்தியது. இதன்மூலம்‌, 2019-20 ஆம்‌ கல்வியாண்டில்‌ வெறும்‌ 6-ஆக இருந்த மருத்துவக்‌ கல்வியில்‌ சேரும்‌ அரசுப்‌ பள்ளி மாணவ, மாணவியரின்‌ எண்ணிக்கை 2020-21 ஆம்‌ கல்வியாண்டில்‌ 400-க்கும்‌ மேல்‌ உயர்ந்தது. இந்தச்‌ சட்டத்தை இயற்றாமல்‌ இருந்திருந்தால்‌, அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 8 மாணவ, மாணவியர்‌ மட்டுமே மருத்துவப்‌ படிப்பில்‌ சேர்ந்திருப்பர்‌. இதன்மூலம்‌ ஏழை, எளிய மாணவர்களை, கிராமப்புற மாணவர்களை பாதுகாத்த அரசு மாண்புமிகு அம்மா அவர்களின்‌ வழியில்‌ நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக அரசு என்பதை இங்கே பெருமையுடன்‌ சுட்டிக்காட்ட விரும்புகிறேன்‌.

மத்தியிலும்‌, மாநிலத்திலும்‌ ஆட்சி அதிகாரத்தில்‌ இருந்தபோது விட்டுவிட்டு, இப்போது அதுகுறித்து பேசுவது ‘தும்பை விட்டுவிட்டு வாலைப்‌ பிடிப்பதற்கு சமம்‌’ என்ற பழமொழியைத்தான்‌ நினைவபடுத்துகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.