இன்றிரவு மீளவும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் 20 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ஹோகண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
நாடு தழுவிய ரீதியில் இன்று புதன்கிழமை இரவு 10 மணிமுதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிவரையில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. கடந்த மாதம் 21 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடு கடந்த 21 ஆம் திகதி தளர்த்தப்பட்டிருந்த நிலையில் , எதிர்வரும் இரு தினங்களை அடிப்படையாக கொண்டு மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 20 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்போது, பொலிஸ் சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதுடன் , இவற்றுள் பெரும்பாலானவை மாகாண எல்லைப் பகுதிகளை இலக்குவைத்தே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை மாத்திரமே இயங்கும். இதன்போது , அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஏனையவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.
மேலும் பொது போக்குவரத்து சேவைகள் இயங்காது, வர்த்தக நிலையங்களும் திறக்கப்படமாட்டாது. இந்நிலையில் மக்கள் தேவையின்றி வெளி பிரதேசங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதேவேளை, பொசன் போயா விடுமுறை தினமான நாளையதினம் மதவழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் வீடுகளில் இருந்தவாறே வழிபாடுகளில் ஈடுபடமுடியும். இதன்போது மதஸ்தலங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றார்.