இலங்கை தமிழர்களான புதுமண தம்பதியருக்கு திருமணம் முடிந்த சில நிமிடங்களில் கிடைத்த இன்ப அதிர்ச்சி!

தமிழகத்தில் கொரோனா விதிகளை பின்பற்றி எளிய முறையில் இலங்கை தமிழர்கள் முகாமில் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தின் பேரூர் தாலுகா அலுவலகத்தில், ஆட்சியர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார். அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்து, வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை, விரைந்து வழங்க வேண்டும் என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்பின், பேரூர் பேரூராட்சியின், 3வது வார்டு பகுதியில் உள்ள தனிமைப்படுத்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இலங்கை தமிழர்கள் முகாமில், ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அங்கு குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுடன் எளிய முறையில், திருமணம் நடந்ததை கண்டார்.

அரசின் விதிமுறைகளை பின்பற்றி, திருமணம் செய்த புதுமண தம்பதியர் மாணிக்கவாசகன், ஸ்ரீசரிகாவை வாழ்த்தி, சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

இது தம்பதிக்கு மகிழ்ச்சியாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது தம்பதியின் உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.