பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி(94) மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காரைக்குடியை சேர்ந்தவர் ஜெமினி ராஜேஸ்வரி. 22-9-1927ல் பிறந்தவர். தனது 8 வயதிலேயே சந்திரலேகா படத்தில் நடித்தவர். ஜெமினி நிறுவனத்தில் பணியாற்றியதால் இவர் ஜெமினி ராஜேஸ்வரி என்று அழைக்கப்பட்டார்.
சந்திரலேகா படத்தில் குரூப் டான்சராக இருந்த ராஜேஸ்வரி, தொடர்ந்து 500 படங்களுக்கு மேல் நடனம் ஆடினார். அதன் பின்னர் குணச்சித்திர நடிகை ஆனார்.
குழந்தை உள்ளம், உனக்காக நான், காதல் படுத்தும் பாடு, ஒருத்தி மட்டும் கரையினிலே, வேலைக்காரன், நிறம் மாறாத பூக்கள், சின்ன வீடு, 16 வயதினிலே, எதிர்நீச்சல், கயல் உள்ளிட்டர் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1000க்கும் மேலான மேடை நாடகங்கள் மற்றும் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
‘ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்குறவளாச்சே’ என்று 16 வயதினிலே படத்தில் காந்திமதியை பார்த்து பேசிய வசனம் இவரை ரசிகர்களிடையே பிரபலப்படுத்தியது.
முதுமையின் காரணமாக தனது குரோம்பேட்டை வீட்டில் இருந்த ராஜேஸ்வரிக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
குணச்சித்திர நடிப்பால் இத்தனை ஆண்டுகள் ரசிகர்களை ஈர்த்த ஜெமினி ராஜேஸ்வரியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.