கொரோனா பெருந்தொற்று காரணமாக, பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பாடம் கற்றுவருகின்றனர்.
இதனால் மன சோர்வு, மன அழுத்தம் போன்ற பல இன்னல்களை நாளுக்கு நாள் மாணவ, மாணவிகள் சந்தித்து கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் விழுப்புரம் நகரில் வசித்துவரும் 15 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு அரியவகை மனச்சோர்வு ஏற்பட்டு, தன் தலைமுடியை பிய்த்து சாப்பிட்டுள்ள சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் நகரில் 15 வயது மாணவி ஒருவர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்று வந்துள்ளார். பெற்றோர் இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால் தன் பாட்டியுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
அப்போது அச்சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி, வாந்தி என ஏற்பட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார், பின்பு சோதனை மேற்கொண்டபோது, வயிற்றில் முடிகளால் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது சிறுகுடல் வரை பரவியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்து அச்சிறுமியின் வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றியுள்ளனர்.
தற்போது அச்சிறுமிக்கு மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.