வேறு எந்த மாற்று வழிகளும் இல்லாத காரணத்தினாலேயே எரிபொருளின் விலைகளை அதிகரிக்க நேரிட்டது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
விலைகளை குறைக்க முடியுமான முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருளின் விலைகள் குறைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை மற்றும் அதனூடாக மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகி இருப்பது குறித்து அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் உணர்ந்துள்ளனர்.
இதனால், எரிபொருள் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்பது முழு அரசாங்கத்தினதும் நிலைப்பாடு எனவும் ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் எரிபொருள் விலைகள் குறைக்கப்படுமா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ரம்புக்வெல்ல, இது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல எனவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் எரிபொருள் விலைகளை குறைப்பதில் பசில் ராஜபக்சவின் தலையீடு அவசியமற்றது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.