கமல்ஹாசன் தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறார். தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார். ஏற்கனவே அவர் நடித்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவும் ஒப்பதமாகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தை தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். தற்போது மலையாளத்தில் திரிஷ்யம் 2-ம் பாகம் வெளிவந்தும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அந்த படத்தையும் தமிழில் பாபநாசம் 2 என்ற பெயரில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதில் கமல்ஹாசன் ஜோடியாக கவுதமிக்கு பதில் மீனா, சிம்ரன், நதியா ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என்று தெரிகிறது. நதியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த நதியா கமல்ஹாசனை தவிர்த்து ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து பெரிய நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தார். முதல் தடவையாக கமல்ஹாசனுடன் அவர் ஜோடி சேருவது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.