கதாநாயகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். விஜய்சேதுபதி விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் வில்லனாக வந்தார். மணிரத்னத்தின் கடல், விஷாலின் இரும்புத்திரை படங்களில் அர்ஜூன் வில்லன் வேடம் ஏற்றார். தெலுங்கு படமொன்றிலும் வில்லனாக நடிக்க அர்ஜூனிடம் பேசி வருகிறார்கள். தனுசின் அனேகன் படத்தில் கார்த்திக் வில்லன் வேடம் ஏற்றார்.
அஜித்குமாரின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்தார். இந்தி படமொன்றில் வில்லனாக நடிக்க விஷாலிடம் பேசி வருகிறார்கள். ஜெய்க்கும் வில்லன் வாய்ப்பு வந்துள்ளது. ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமி வில்லனாக வந்தார். தெலுங்கில் அகில் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கவும் அரவிந்தசாமியிடம் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க அவரிடம் பேசி வருகிறார்கள். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.