16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்பது குறித்து சூழ்நிலையை ஆய்வு செய்து முடிவெடுக்க ஜூன் 28-ந் தேதி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, ஐ.சி.சி. காலஅவசாகம் அளித்தது. இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீகரத்துக்கு மாற்றப்பட இருக்கிறது என்றும் அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் இந்த போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று உறுதி செய்தார். இது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் என்பதை நாங்கள் ஐ.சி.சி.க்கு அதிகாரபூர்வமாக தெரிவித்து விட்டோம். போட்டியில் பங்கேற்கும் அனைத்து தரப்பினரின் உடல் நலன் பாதுகாப்பை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. போட்டி அட்டவணை குறித்து இன்னும் சில நாட்களில் முடிவு செய்வோம். உலக போட்டியை அக்டோபர் 17-ந் தேதி தொடங்குவது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட எஞ்சிய ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்தப்பட இருக்கிறது. உலக கோப்பை போட்டி இடமாற்றம் குறித்து விரைவில் ஐ.சி.சி. முறைப்படி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.