இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்தடன் இணைந்து ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இது அவசர கால பயன்பாட்டு அங்கீகாரம் பெற்று பயன்பாட்டில் உள்ளது.
இந்த தடுப்பூசி இப்போது உலக நாடுகளையெல்லாம் பதற்றத்தில் ஆழ்த்தி வருகிற டெல்டா வைரஸ் மற்றும் ஆல்பா வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்.) கண்டுபிடித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
* கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் இருந்து ரத்த சீரம் பெற்று 2 ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு பொருளை உருவாக்குகிறது. மேலும் ஆல்பா (பி.1.1.7) மற்றும் பி.1.617 (டெல்டா) வகை வைரஸ்களுக்கு எதிராக செயல்படுகிறது என கூறுகின்றன. இதில் ஆல்பா வைரஸ் இங்கிலாந்திலும், டெல்டா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டதாகும்.
* கோவேக்சின் சார்ஸ்-கோவ்-2 வின் முடக்கப்பட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. இதை நகல் எடுக்க முடியாது. ஆனால் வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு பொருளை உருவாக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது. சகித்துக்கொள்ளக்கூடியது ஆகும்.
* இந்த தடுப்பூசியின் வெளியிடப்படாத 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள், இது நோய்க்கு எதிராக 78 சதவீத செயல்திறனையும், ஆஸ்பத்திரியில் சேர்ப்பது உள்ளிட்ட கடுமையான கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 100 சதவீத செயல்திறனையும் கொண்டுள்ளது.