தமிழகத்தில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் பொலிசார் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறையின் எச்.ஓ.டியாக பொறுப்பு வகித்து வந்தவர் பேராசிரியர் பால் சந்திர மோகன்.
இவர் தன்னிடம் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கவரும் தமிழ்த்துறையின் பட்டமேற்படிப்பு மாணவிகளிடம் தொடர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவரின் மோசமான செயல் குறித்து விரிவான புகாராக எழுதி 5 மாணவிகள் கையெழுத்திட்டு கல்லூரி முதல்வருக்கு கடந்த மார்ச் மாதம் அனுப்பிவைத்தனர்.
அதில், பால் சந்திரமோகன், வகுப்பறையில், மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது, தங்கள் கால்களோடு உரசிக்கொண்டே நெருக்கம் காட்டுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டல்கள் ஈடுபட்டதாகவும், அவரது அறைக்கு தனியாக செல்லும் மாணவிகளின் முன்னிலையில் சட்டையையும் பேண்ட்டையும் தளர்த்திக் கொண்டு, அவர் செய்த ஆபாச சேட்டைகளை பார்த்து, தலையை குனிந்து கொண்டே வகுப்பறையில் இருந்ததாக மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால், தனது அறைக்கு வரச்சொல்லி, கட்டாயப்படுத்துவதாகவும் , அப்படி செல்லும் மாணவிகளிடம் நல்ல அழகா மேக்கப் போட்டு வரதெரியாது, என் வீட்டு வேலைக்காரி கூட பவுடர் எல்லாம் போட்டு ஜம்முன்னு இருப்பா என்று வசைபாடியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த புகாரை விசாரிக்காமல் கிடப்பில் போட்டுவைத்திருந்த நிலையில் பத்மசேஷாத்திரி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்தால் விவகாரம் பெரிதாகிவிடும் என்று அஞ்சிய கல்லூரி நிர்வாகம், மாணவிகளின் புகாரை விசாரிக்க வக்கீல் ஜெயந்திராணி தலைமையிலான 7 பேர் கொண்ட உள் விசாரணை குழுவை அமைத்தது.
இந்த விசாரணை குழுவானது, தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியை நளினி சுந்தரியிடமும், எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த ஐந்து மாணவிகளிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
விசாரணையின் இறுதியில் பால் சந்திர மோகனின் அனைத்து பாலியல் அத்துமீறல்களும் உறுதியானதாக கூறப்படுகின்றது. அதன்படி அவரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
எச்.ஓ.டிக்கு ஆதரவாக செயல்பட்ட உதவி பேராசிரியை நளினி சுந்தரி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தினால் சந்திரமோகனின் முழு லீலைகள் வெளிவரும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.