சமீபத்தில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் அரசுடன் இணைந்து நடத்திய ஆய்விலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி, தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் நேற்று தெரிவித்தார்.
முன்களப் பணியாளர்களான போலீசாரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாத 4 ஆயிரத்து 868 போலீசாரில் 15 பேர் கொரோனா தொற்றில் இறந்ததும், தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 35 ஆயிரத்து 856 பேரில் 9 பேர் இறந்ததும் தெரியவந்தது. ஆனால் 2 டோஸ்களும் போட்டுக்கொண்ட 42 ஆயிரத்து 720 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 2 பேர் மட்டுமே பலியானது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை சுட்டிக்காட்டிய வி.கே.பால், ‘போலீசார் அதிக ஆபத்தான சூழலில் பணியாற்றுவதால் அவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி, ஒரு டோஸ் தடுப்பூசி 92 சதவீதம் பாதுகாப்பானது என்றும், 2 டோஸ்கள் 98 சதவீதம் பாதுகாப்பானது என்றும் தெரியவந்துள்ளது’ என்று கூறினார்.