இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்து. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. இங்கிலாந்தில் தற்போது விளையாட்டு போட்டிகளை காண 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கபடவில்லை. கட்டுப்பாடுகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக போடப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவிக்க இருப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று பேட்டி அளித்து இருந்தார்.
ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ கொரோனாவுக்கு எதிராக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் சட்ட ரீதியான கட்டுப்பாடுகளை தளர்த்த இருக்கிறோம். கலாசார நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகளில் ரசிகர்களுக்கு பங்கேற்பதில் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளது” என்றார்.
இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் குழுவான பார்மி ஆர்மி தனது டுவிட்டரில், வரும் 19 ஆம் தேதி முதல் மைதானங்களில் மீண்டும் 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட இருப்பதாக பதிவிட்டுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் பட்சத்தில் 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனத்தெரிகிறது.