ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக இரண்டு கைகளாலும் பந்து வீசக்கூடிய இரண்டு வகை சுழல் பந்து வீச்சினையும் மேற்கொள்ளக்கூடிய அபூர்வ சாதனையாளர் ஒருவர் மாநில மட்டத்திலான அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார். இதிலிருக்கின்ற இருமடங்கு பெருமையும் பேராச்சரியமும் என்ன என்று பார்த்தால், இந்த சாதனை வீரன் ஒரு தமிழன்.
சென்னையில் பிறந்து, பத்து வயதில் ஆஸ்திரேலியா – சிட்னிக்கு புலம்பெயர்ந்த நிவேதன் ராதாகிருஷ்ணன், சிறுவயதிலிருந்தே தனது அபாரமான கிரிக்கெட் திறமையை வெளிக்காண்பிக்க தொடங்கினார்.
இரண்டு கைகளாலும் பந்து வீசக்கூடிய இவரது அசாத்திய திறமையின் முன்னால், துடுப்பாட்டக்காரர்கள் திணறினார்கள். விளைவாக, 16 வயதுக்கு உட்பட்ட ஆஸ்திரேலிய அணியில் இவர் இணைத்துக்கொள்ளப்பட்டு, துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டங்களில் 2019 இல் பங்குபற்றி தனது திறமையை வெளிக்காட்டினார்.
தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற கழக மட்டப்போட்டிகளில் விளையாடி தனது பந்து வீச்சினால் பல கிரிக்கெட் நட்சத்திரங்களின் கவனத்தை ஈர்த்தார்.
துடுப்பாட்டத்திலும் தனது திறமையை காண்பித்த நிவேதன், ஆஸ்திரேலிய அணி தெரிவாளர்களின் கண்களில், தொடர்ந்தும் ஒரு பட்டாம்பூச்சியாக பறந்துகொண்டேயிருந்தார்.
தற்போது, இருபது வயதாகும் நிவேதனை, தஸ்மேனிய மாநிலத்தின் “தஸ்மேனியன் புலிகள்” அணி, 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான போட்டிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாங்கியுள்ளது.