3 முறை வானத்தில் தலைகீழாக சுழன்ற விமானம்! வெளியான அதிரவைக்கும் தகவல்கள்

பிலிப்பைன்ஸில் விமான விபத்துக்கு முன்னதாக 2 அல்லது மூன்று முறை விமானம் தலைகீழாக சுழன்றதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 96 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானதில் 52 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் 29 வீரா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விமானம் மோதியபோது அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் 6 பேர் பலத்த காயமடைந்தனா்.

அவா்களில் இருவா் உயிரிழந்தனா் என முதல் கட்ட தகவல் வெளியானது, காயம் அடைந்தவர்களில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து கருப்பு பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இது விமானம் எப்படி விபத்தில் சிக்கியது என்பதை அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும் என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானி சி-130 ரக விமானம் இயக்குவதில் பல வருடம் அனுபவம் பெற்றவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன், உயிர்பிழைத்தவர்களிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு இரண்டு, மூன்று முறை வானத்தில் தலைகீழாக திரும்பியுள்ளது.

அதை கட்டுப்படுத்துவதற்கு விமானி முயன்றார். இருப்பினும் அது மிக தாமதமான முயற்சியாக இருந்தது எனவும் தெரிவித்தனர்.