உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது.
முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என தொடர்ச்சியாக ஒவ்வொரு நாடுகளிலும் பொதுமக்களை கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை 18 கோடிக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அவர்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தன்னை தற்காத்துக் கொள்ள அவ்வப்போது உருமாறி வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரசின் டெல்டா ரகம் தற்போது தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் பரவி வருகிறது. தற்போது உலகத்தையே இந்த டெல்டா ரகம் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வாரம் 54 ஆயிரத்து 268 புதிய நோயாளிகள் உருவாக்கியுள்ளனர் என இங்கிலாந்து சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, இங்கிலாந்து சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஜெனி ஹாரிஸ் கூறுகையில், வைரசின் பரவும் தன்மை அதிகமாகியுள்ளதே தவிர, மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. தடுப்பு மருந்துகள் நூறு சதவீத பாதுகாப்பு தராது. எனவே மக்கள் சமூக விலகலைப் பின்பற்றி கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
இங்கிலாந்தில் டெல்டா பிளஸ் ரகம் குறைவாகவே காணப்படுகிறது. வெறும் 44 பேர் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் டெல்டா பிளஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.