தமிழகத்தில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில், புதுமாப்பிள்ளையை அவரது தந்தையே வெட்டிக்கொன்ற சோக சம்பவம் நடந்துள்ளது.
மதுரையின் அய்யனகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 49), இவரது மனைவி ராணி(வயது 45).
இவர்களுக்கு சுபாஷ்(22), பிரதீப்(20) என்ற 2 மகன்கள். ஒரு மகளும் உள்ளார்.
இதில் பிரதீப்புக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று திருமணமாய் நடைபெறவிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளும் படுஜோராக நடந்து வந்த நிலையில், நேற்று மாலை பிரதீப் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கவேண்டும் எனக்கூறி, பணம் கேட்டு தந்தையிடம் சண்டையிட்டுள்ளார்.
ஆனால் இளங்கோவன் பணம் தர முடியாது என மறுத்ததுடன், நாளை திருமணத்தை வைத்துக்கொண்டு இப்படி நடந்து கொள்கிறாயே என திட்டியுள்ளார்.
அதற்கு, பணம் தரவில்லை என்றால் நான் திருமணம் செய்யமாட்டேன் என்று பிரதீப் கூறி வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்தாராம்.
இதுதொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த பிரதீப் அங்கிருந்த கோடரியை எடுத்து இளங்கோவனை வெட்ட முயன்றார்.
அதை இளங்கோவன் பறித்து திருப்பி தாக்க முயன்றதாகவும், அப்போது பிரதீப் கழுத்தில் கோடரி வெட்டியதாகவும் தெரியவருகிறது.
ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த பிரதீப்பை, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து வழக்குபதிவு செய்த வாடிப்பட்டி போலீசார், இளங்கோவனை கைது செய்தனர்.