கொள்ளு ஒருவகை பயறு வகையாகும். இதற்கு கொள், காணம், முதிரை என்று வேறு பல பெயர்களும் உண்டு. இது தட்டையாக பழுப்பு மற்றும் செமண் நிறத்திலும் காணப்படும். இது குதிரையின் தீவணமாகும்.
ஆயுர்வேத, சித்த மருத்துவத்திலும் கொள்ளு பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன.
இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.
அதேபோல் உடல் எடையைக் குறைக்க கொள்ளு பல விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.
அந்தவகையில் உடல் எடை சட்டென குறைக்கும் கொள்ளு லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு- 1 கப்
கருப்பு உளுந்து – 1/2 கப்
வேர்க்கடலை – 4 ஸ்பூன்
எள்ளு – 2 ஸ்பூன்
வெல்லம் – 3
ஏலக்காய் – 2 நெய் – 2 ஸ்பூன் ( நீங்கள் விரும்பினால் )
தயாரிக்கும் முறை
கொள்ளை கடாயில் போட்டு நன்றாக வாசம் வரும் வரை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின் அதே கடாயில் கருப்பு உளுந்தை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அடுத்து வேர்க்கடலை, எள், ஏலக்காயை வறுத்துக் கொள்ளுங்கள்.
வறுத்த அனைத்துப் பொருட்களையும் ஆற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்த பொடியுடன், நன்றாக பொடி செய்யப்பட்ட வெல்லத்தை போட்டு, 2 ஸ்பூன் நெய் இல்லையெனில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து சிறிய உருண்டையாக செய்து கொள்ளுங்கள்.
கொள்ளு லட்டு ரெடி. இந்த லட்டு உருண்டைகளை ஒரு காற்றுபுகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒன்று என்ற கணக்கில் இந்த லட்டை சாப்பிட்டு வந்தால், உங்களின் உடல் எடை குறைவதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
நன்மைகள்
கொள்ளு பருப்பில் உடலில் இருக்கும் கொழுப்பு அல்லது ஊளைச் சதையை குறைக்க உதவும். அத்தோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கவும், எலும்புக்கும், நரம்புகளுக்கும் கொள்ளு பருப்பு உதவும்.