கிளிநொச்சி கௌதாரி முனையில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் அட்டை பண்ணை அப்பகுதி கடற் தொழிலாளர்களுடன் கலந்துபேசி பரீட்சார்த்தமாக நடத்தப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை பகுதியில் சீன நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அட்டை வளர்ப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கேட்டபோது ஏற்கெனவே அரியாலையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் அட்டை குஞ்சு உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
அந்த அனுமதியின் அடிப்படையில் கௌதாரிமுனை பகுதியில் அப்பகுதி மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடி பரீட்சார்த்தமாக குறித்த அட்டை பண்ணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக நாளையதினம் நேரடியாகச் சென்று பார்வையிடுவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்கு தேவையான தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக அருகிலேயே இருக்கின்ற புலி குளத்தை புனரமைப்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கையகப் படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் மற்றும் விவசாய நிலங்களை விடுவித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் ஆறுமுகம் திட்டத்தினால் ஏற்படும் பாதக சாதக நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.