மிக அரிய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்தவர் புர்காராம்(42). இவர், பழக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
ஆனால் இதெல்லாம் வருடத்தில் 65 நாட்களுக்கு மட்டும் தான். மீதமுள்ள 300 நாட்களில் புர்காராம் தூங்கியபடியேதான் இருப்பாராம்.
மேலும், இப்படியே சுமார் 23 ஆண்டுகளாக அவர் தூங்கிக்கொண்டே இருந்துள்ளாராம். சாப்பிடுவது கூட தூக்கத்தில் தானாம். ராமாயணத்தில் வரும் கும்பகர்ணன் 6 மாத காலம் தொடர்ச்சியாகத் தூங்கக்கூடிய புராணிக நபர் என்றால், நம் புர்க்காராம் 300 நாட்கள் தூக்கத்திலேயே கழிக்கிறார்.
காரணம் இவருக்கு இருக்கும் ஹைபர்சோம்னியா என்ற ஒரு அரிதான உறக்க நோய்தான். 23 ஆண்டுகளுக்கு முன்பாக இவருக்கு இந்த அதிஉறக்க வியாதியான ஹைபர்சோம்னியா இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
தொடக்கத்தில் 15 மணி நேரமே தூங்கிக் கொண்டிருந்தார். பிறகு படிப்படியாக அதிகரித்து மணிக்கணக்கு எகிற பிறகு நாட்கணக்கும் எகிறியது. இப்போது மோசமாகி 25 நாட்களுக்கு தொடர்ச்சியாகத் தூங்குகிறார்.
இப்படி 300 நாட்கள் தூக்கத்திலேயே வருடங்களைக் கடந்து போகின்றன. வேலையில் இருக்கும்போது கூட இவர் தூக்கத்துக்குள் சென்று விடுகிறார். இதோடு இவருக்கு கடுமையான தலைவலியும் இருந்து வருகிறது.
இது ஒரு கொடிய நோய், மற்றவர்களுக்கும் கஷ்டம்,, அவருக்கும் கஷ்டம், ஏனெனில் கடும் களைப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், இவருக்கு குளியலும் படுக்கையில்தான், குளிப்பாட்டவில்லை எனில் பெட் சோர் வந்து உடலெல்லாம் புண்ணாகிவிடும்.
இத்தகைய கொடிய நோய் இருந்தும் புர்க்காராம் மனைவி லஷ்மி தேவி, தாய் கன்வரி தேவி இவர் விரைவில் குணமடைந்து சராசரி வாழ்க்கைக்குத் திரும்புவார் என்று நம்புகிறார். ஆனால், இந்த வகையான நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என சொல்லப்படுகிறது.